ADDED : பிப் 29, 2024 11:29 PM

புதுடில்லி:கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடுகள் 13 சதவீதம் சரிந்து, 2.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டில் மொத்த அன்னிய நேரடி முதலீடுகளின் மதிப்பு, 3.04 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 13 சதவீதம் சரிந்து, 2.65 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், வர்த்தகம், சேவை, தொலை தொடர்பு, வாகனம், மருந்து மற்றும் ரசாயனங்கள் ஆகிய துறைகளில் அன்னிய நேரடி குறைந்துள்ளது. அதேசமயம், கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் மின் ஆகிய துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், சிப்ரஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து, அன்னிய நேரடி முதலீடு குறைந்துள்ளது. உலகளவில் அதிகரிக்கப்படும் வட்டி விகிதங்கள் மற்றும் புவிசார் பதற்றநிலை காரணமாக, அன்னிய நேரடி முதலீடுகள் குறைந்துள்ளன.

