ADDED : மே 18, 2025 08:33 PM

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், மின் வாகன காப்பீடு பெறுவதும் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் நட்பான தன்மை உள்ளிட்ட காரணங்களால், மின் வாகன பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் வாகன காப்பீடு பெறுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த மின் வாகன காப்பீடு, 2025 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பாலிசிபஜார் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
மேலும், சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்கள் மின்வாகன காப்பீட்டில் 55 சதவீதத்திற்கு மேல் பங்கு வகிக்கின்றன. கார்களில் மட்டும் அல்லாமல் இருசக்கர வாகனங்கள் பிரிவிலும் காப்பீடு அதிகரித்துள்ளது.
இருசக்கர வாகனங்கள்
மின் வாகனங்களுக்கு காப்பீடு பெறுவது அதிகரித்திருப்பதற்கும் இருசக்கர வாகனங்கள் முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் பிரிவில் மின் வாகனங்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. குறிப்பாக மின் ஸ்கூட்டர் விற்பனை அதிகமாக உள்ளது. அரசும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.
புதுயுக நிறுவனங்கள் பல இந்த பிரிவில் இயங்கி வருகின்றன. மின் வாகன காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், வழக்கமான வாகன காப்பீட்டில் இருந்து மின் வாகன காப்பீடு வேறுபட்ட அம்சங்களை கொண்டிருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வழக்கமான இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின் வாகனங்கள் தனித்துவமான இடர் அம்சங்களை கொண்டுள்ளன. பேட்டரி பாதிக்கப்படும் வாய்ப்பு, தீ விபத்து பிரச்னை மற்றும் சார்ஜிங் நிலைய சிக்கல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
எனவே, பேட்டரி பாதிப்பு உள்ளிட்ட இடர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் கொண்ட பாலிசிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. மின் வாகனங்களில் பேட்டரி தான் விலை அதிகமான பாகம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வாகன விலையில், பேட்டரியின் மதிப்பு 30 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம்.
கூடுதல் அம்சங்கள்
விரிவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பாலிசியுடன், கூடுதல் அம்சங்களும் தனியே அளிக்கப்படுகின்றன. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இரண்டு பிரிவிலுமே சாலையோர உதவி, பூஜ்ஜியம் தேய்மானம், பேட்டரி பாதுகாப்பு உள்ளிட்டவை கூடுதல் பாதுகாப்பாக தனியே அளிக்கப்படுகின்றன.
பேட்டரி திருடு போவது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிரான பாதுகாப்பாக, இவை அமைகின்றன. எனினும், மின் வாகன காப்பீடு பிரீமியம் அதிகமாக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. எனினும், மின் வாகன ஏற்பு அதிகரிப்பது மற்றும் இந்த பிரிவுக்கான பிரத்யேக பாலிசிகள் அறிமுகம் செய்யப்படுவது, இதை சீராக்க கூடும் என கருதப்படுகிறது.
அதே நேரத்தில் மின் வாகன காப்பீடு அம்சங்கள் தொடர்பாக சில தவறான எண்ணங்களும் இருக்கின்றன. இவை மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் கொண்டவை என்பதால், சொந்த பாதிப்புக்கான பாதுகாப்பு அம்சம் கொண்டிருக்கவில்லை எனும் கருத்து உள்ளது.
ஆனால், மூன்றாம் தரப்பு பாதுகாப்பு அம்சங்களோடு, சொந்த பாதிப்புக்கான பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான அம்சங்கள் கொண்டுள்ளன. மின் வாகன காப்பீட்டிற்கு என, அரசு தரப்பில் தனியே எந்த சலுகையும் தரப்படவில்லை என்றாலும், மின் வாகனங்கள் தொடர்பாக வேறு பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, மின் வாகன ஏற்பு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.