கண்காட்சியில் பங்கேற்க நிதி உதவி: தமிழக சிறு, குறு நிறுவனங்கள் ஆர்வம்
கண்காட்சியில் பங்கேற்க நிதி உதவி: தமிழக சிறு, குறு நிறுவனங்கள் ஆர்வம்
ADDED : பிப் 13, 2024 05:44 AM
சென்னை : தொழில் நிறுவனங்கள், நாட்டில் முக்கிய நகரங்களில் நடத்தப்படும் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் பயண செலவு உள்ளிட்டவற்றிற்காக, 1.50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
மத்திய அரசின் கீழ் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 'கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆதரவு' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காக நிதி உதவி அளிக்கப்படுகிறது.
நாட்டில் முக்கிய நகரங்களில் நடத்தப்படும் கண்காட்சியில் பங்கேற்கும் தொழில் நிறுவனங்களுக்கு பயண செலவு உள்ளிட்டவற்றிற்காக, 1.50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில், இந்நிறுவனங்கள், கண்காட்சியில் பங்கேற்கும் முன், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
பின், அதற்கான செலவு விபரங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் இணைய தளத்தில் சமர்ப்பித்து, நிதி உதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, கண்காட்சியில் பங்கேற்றதற்காக அனுமதிக்கப்பட்ட முழு தொகையும் வழங்கப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு, 80 சதவீதம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சமீபகாலமாக, கண்காட்சியில் பங்கேற்று, தங்களின் தயாரிப்பு களை பிரபலப்படுத்தி, விற்க வேண்டும் என்ற ஆர்வம், தமிழக தொழில் நிறுவனங்களிடம் ஏற்பட்டு உள்ளது.
''கடந்த, 2022ல் இருந்து கடந்த மாதம் வரை, 1,200 பேர் விண்ணப்பித்து, இதில் பயன்பெற்றுஉள்ளனர்,'' என்றார்.