'ஃபியோ' சார்பில் உலகளாவிய டெண்டர் தளம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பயன்
'ஃபியோ' சார்பில் உலகளாவிய டெண்டர் தளம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பயன்
UPDATED : அக் 19, 2025 11:14 PM
ADDED : அக் 19, 2025 11:02 PM

கோவை: இந்திய ஏற்றுமதியாளர்கள், உலகளாவிய டெண்டர்களில் பங்கேற்பதற்கு வசதியாக, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான, 'பியோ' ஜி.டி.எஸ்., தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
உலகளாவிய ஒப்பந்தங்களை, இந்திய ஏற்றுமதியாளர்கள், எளிதில் அணுகுவதற்காக, 'பியோ' அமைப்பு, குளோபல் டெண்டர் சர்வீசஸ் எனும் ஜி.டி.எஸ்., தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், உலகளவில் தங்களின் வர்த்தகத்தை விரிவு செய்வதற்கு, இந்தத் தளம் உதவியாக இருக்கும்.
https://tenders.indiantradeportal.in என்ற இத்தளத்தை, பியோ அமைப்பே நிர்வகிக்கும். வர்த்தகம் தொடர்பான நுண்ணறிவு, மற்றும் வசதிக்கான ஒரே தளமாக இது அமைந்துள்ளது.
ஜி.டி.எஸ்., என்பது சந்தா அடிப்படையில் இயங்கும், நிகழ்நேர டெண்டர் ஒருங்கிணைப்பு தளமாகும். இந்திய வர்த்தகங்களுக்கு, 150க்கும் மேற்பட்ட நாடுகளில், 8,000க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட அமைப்புகளில் இருந்து, 15,000 த்துக்கும் மேற்பட்ட சர்வதேச டெண்டர் அணுகலை இது வழங்குகிறது.
சர்வதேச மேம்பாட்டு வங்கிகள், அரசு நிறுவனங்கள், தனியார் - பொது கூட்டாண்மை அமைப்புகள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வரை, ஒப்பந்த விண்ணப்பங்களை உடனடியாக அறிந்து, டெண்டர்களில் பங்கேற்க முடியும்.
@block_B@ சர்வதேச வாய்ப்பு
உலக வங்கி, யுனிசெப், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை - யு.எஸ்.ஏ.ஐ.டி., ஆசிய வளர்ச்சி வங்கி உட்பட, சர்வதேச, தேசிய கொள்முதல் அமைப்புகளிடம் இருந்தும் ஜி.டி.எஸ். தளம் வாய்ப்புகளை வழங்குகிறது. உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், சுகாதாரம், பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், உணவுப் பொருட்கள், ஆலோசனை, நிதி என பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். பியோ தலைமைச் செயல் அதிகாரி அஜய் சஹாய் கூறுகையில், “ஜி.டி.எஸ்., வெறும் தளம் மட்டுமல்ல; இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உலக சந்தையில் நுழைவதற்கான வாயில். உலகளாவிய டெண்டர்களுக்கான அணுகலை திறப்பதன் வாயிலாக, ஜி.டி.எஸ்., நம் நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது,” என்றார்.