முதல் 'டெம்பர்டு கிளாஸ்' ஆலை உத்தர பிரதேசத்தில் துவக்கம்
முதல் 'டெம்பர்டு கிளாஸ்' ஆலை உத்தர பிரதேசத்தில் துவக்கம்
ADDED : ஆக 31, 2025 01:22 AM

நொய்டா:'ஆப்டிமஸ் இன்பிராகாம்' நிறுவனம், உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் அமைத்துள்ள நாட்டின் முதல் 'டெம்பர்டு கிளாஸ்' ஆலையை, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் துவக்கி வைத்தார்.
அமெரிக்காவின் கார்னிங் நிறுவனத்துடன் இணைந்து, முதல் கட்டமாக 70 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ள இந்த ஆலையில், மொபைல் போன்களின் திரையை பாதுகாக்க ஒட்டப்படும் டெம்பர்டு கிளாஸ் தயாரிக்கப்படும். இந்தியாவில் டெம்பர்டு கிளாஸ் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை.
துவக்க விழாவில் பேசிய அமைச்சர், ''வேக மாக வளர்ந்து வரும் நாட் டின் மின்னணு பொருட்கள் தயாரிப்பு கட்டமைப்பில் ஆப்டிமஸ் நிறுவனம் ஒரு புதிய முன்னேற்றமாகும்.
''இரு நிறுவனங்களும் இணைந்து சென்னையில் அமைத்து வரும் கவர் கிளாஸ் தயாரிப்பு ஆலையில், நடப்பாண்டு இறுதிக்குள் தயாரிப்பு பணிகள் துவங்கும்.
''கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் மின்னணு பொருட்கள் தயாரிப்பு ஆறு மடங்கு அதிகரித்து, 11.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இத்துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது,'' என தெரிவித்தார்.
ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்த ஆலைக்கு மொத்தம் 800 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 20 கோடி டெம்பர்டு கிளாஸ்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'ரைனோடெக்' என்ற பிராண்டின் கீழ், வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படும். மின்னணு துறையில் கடந்த 11 ஆண்டுகளில், 25 லட்சம் பேருக்கு நேரடி (அ) மறைமுக வேலைவாய்ப்பு.