ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் 'டாடா' சந்திரசேகரன் அறிவிப்பு
ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் 'டாடா' சந்திரசேகரன் அறிவிப்பு
ADDED : அக் 15, 2024 10:22 PM

புதுடில்லி:இந்தியாவின் உற்பத்தி துறையில், டாடா குழுமத்தின் முதலீடுகள் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை உருவாக்காமல், 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தன் லட்சியத்தை இந்தியா அடைய முடியாது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 லட்சம் புதிய தொழிலாளர்கள் உருவாகி வருகின்றனர். இது, வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துகிறது.
செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் அசெம்பிளி, மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் டாடா குழுமத்தின் முதலீடு காரணமாக, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தோன்றுவதன் வாயிலாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உற்பத்தி துறையில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.
செமிகண்டக்டர் போன்ற உற்பத்தி துறைகள், பல்வேறு மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியவை. ஆகையால், நாங்கள் கோடிக்கணக்கான வேலைகளை உருவாக்க வேண்டும் என்பதை, நோக்கமாக கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2023ம் நிதியாண்டில், இந்தியாவின் உற்பத்தி துறை வேலைவாய்ப்புகள் 7.40 சதவீதம் உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 13 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.