ADDED : நவ 03, 2024 02:33 AM

புதுடில்லி:இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கு, எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' மட்டுமின்றி; பல வெளிநாட்டு நிறுவனங்களும் அனுமதி கேட்டு காத்திருக்கின்றன.
அமேசானின் 'பிராஜெக்ட் குய்பெர்', முனிச் நகரைச் சேர்ந்த 'ரிவாடா நெட்வொர்க்ஸ்', கலிபோர்னியாவைச் சேர்ந்த 'வயாசாட்', பார்சிலோனியாவின் 'சாட்லியட்', கனடாவின் ஒட்டாவா நகரைச் சேர்ந்த 'டெலிசாட்', 'குளோபல்சாட்', 'டெலாவர்' ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில், செயற்கைக்கோள் வழி தொலைத்தொடர்பு சேவை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணையமான டிராயிடம் இவை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளன.
இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் சேவையை துவங்க அனுமதி கேட்டுள்ளதுடன், குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கிட உதவும் வகையில், ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்குமாறும் இந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
செயற்கைக்கோள் வழி தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமத்தை வழங்க, ஏல நடைமுறையின்றி, நிர்வாக ஒதுக்கீடு முறையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ், ஜியோ உட்பட சில நிறுவனங்கள், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வருகையால், கடும் போட்டி வர்த்தகத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.