'சாம்சங் ஸ்டிரைக் நீடித்தால் அன்னிய முதலீடு பாதிக்கும்' 'நோக்கியா' நிலை ஏற்படும்: ஜி.டி.ஆர்.ஐ.,
'சாம்சங் ஸ்டிரைக் நீடித்தால் அன்னிய முதலீடு பாதிக்கும்' 'நோக்கியா' நிலை ஏற்படும்: ஜி.டி.ஆர்.ஐ.,
ADDED : செப் 25, 2024 02:34 AM

புதுடில்லி:'சாம்சங்' நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்துக்கு விரைவாக தீர்வு காணத் தவறினால், உலகின் உற்பத்தி மையமாக மாறும் இந்தியாவின் இலக்கில் பாதிப்பு ஏற்படக்கூடும் என, ஜி.டி.ஆர்.ஐ., எனப்படும் 'குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்' அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, ஜி.டி.ஆர்.ஐ., நிறுவனர் அஜய் ஸ்ரீவத்சவா கூறியதாவது: ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் 'சாம்சங்' ஆலையில், தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்துக்கு விரைவாக தீர்வு காண வேண்டியது அவசியம்.
இதுபோன்ற தடங்கல்கள் எழுவதில், அன்னிய நிறுவனங்கள் ஏதாவது துாண்டி விடுகின்றனவா என, தொழிற்துறை புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும்.
சாம்சங் வேலைநிறுத்த பிரச்னைக்கு தமிழக அரசு விரைவாக தீர்வு காணத் தவறினால், ஸ்ரீபெரும்புதுாரில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 'நோக்கியா' நிறுவனம் மூடப்பட்டது போன்ற சூழல் எழ வாய்ப்புள்ளது.
அவ்வாறு நடந்தால், வேலையிழப்புகள் ஏற்படுவதுடன் உற்பத்தித் துறையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கச் செய்துவிடும்.
உலகின் உற்பத்தி மையமாக உருவாக வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்திலும் முயற்சியிலும் 'சாம்சங்' தொழிற்சாலை வேலைநிறுத்தம் முட்டுக்கட்டையாக அமையும் அபாயம் உள்ளது. மேலும், வேலைநிறுத்தம் நீடிப்பது, 'பாக்ஸ்கான், சன்மினா, ப்ளெக்ஸ்' உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படும் ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உற்பத்திக்கான சூழலை பாதிக்க வாய்ப்புள்ளது.
மின்னணு பொருட்கள் உற்பத்தி மையமாக உள்ள தமிழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் தயக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ள, இந்த வேலைநிறுத்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.