தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய வெளிநாட்டினர் ஆர்வம்: முதல்வர்
தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய வெளிநாட்டினர் ஆர்வம்: முதல்வர்
ADDED : செப் 21, 2025 12:25 AM

சென்னை:''தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுவதை ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் அறிய முடிந்தது'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பயணம் செய்தார். இந்த பயண அனுபவங்கள் தொடர்பாக, 'மக்களுடன் ஸ்டாலின்' செயலியில் அனுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ள பதில்:
ஜெர்மனியில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் எப்படியெல்லாம் கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறோம்; எவ்வளவு படித்த திறமையான இளைஞர்கள் உள்ளனர்; இங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை தாண்டி, எப்படியெல்லாம் திறன் மேம்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தோம். அதை அறிந்த அவர்கள், தமிழகத்தை பற்றி வியந்து பேசினர்.
ஜெர்மனி நாட்டில், என்.ஆர்.டபிள்யூ., மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும், 'மினிஸ்டர் பிரசிடென்ட்டை' சந்திக்க சென்றபோது, அவர்கள் அளித்த வரவேற்பில், எந்த அளவுக்கு தமிழகத்துக்கு மதிப்பு கொடுக்கின்றனர் என்று தெரிந்தது.
முதலீட்டாளர்களிடம் பேசும்போது, இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு நாம் வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதை பெருமையுடன் கூறினர்.
அதனுடன், அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு செல்வதையும், ஒரு தொழில் பிரிவை மட்டும் முக்கியத்துவம் செய்யாமல், அனைத்து பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, புதிதாக வளர்ந்து வரும் துறைகள் மீதும் கவனம் செலுத்துவதையும் பாராட்டினர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்ய அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த மாற்றத்தையும், வளர்ச்சியையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான தொலைநோக்கு திட்டங்களை தான் செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.