ADDED : மார் 31, 2025 01:07 AM

புதுடில்லி:இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களானது, இந்நாடுகளுக்கான ஏற்றுமதி முறையே 27 மற்றும் 6 சதவீதம் அதிகரிக்க உதவியுள்ளன.
நாட்டின் பழ ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 47.50 சதவீதம் அதிகரித்து உள்ளது. பழ ஏற்றுமதிக்கான புதிய சந்தைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து மாம்பழம், திராட்சை, வாழை, ஆப்பிள், அன்னாசி, மாதுளை மற்றும் தர்ப்பூசணி உள்ளிட்ட முக்கிய பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நம் நாட்டின் பழங்கள் தரம் சர்வதேச தரத்தில் இருப்பதை உறுதி செய்யவும், பூச்சிக்கொல்லி அளவுகளில் மிகக்குறைந்தபட்ச வரம்புகளை உறுதி செய்வதிலும் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
இத்துறையில் நிறைய சவால்கள் இருந்தபோதிலும், அதிக முன்னேற்றங்களுடன், வினியோக தொடரில் உள்ள இடைவெளிகள் நிரப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.