எரிபொருள் இண்டிகேட்டரில் கோளாறு: 'விட்டாரா'வை திரும்பப்பெறும் மாருதி
எரிபொருள் இண்டிகேட்டரில் கோளாறு: 'விட்டாரா'வை திரும்பப்பெறும் மாருதி
ADDED : நவ 16, 2025 01:45 AM

மும்பை:மாருதி சுசூகி நிறுவனம், குறைபாடுகளை சரி செய்து தருவதற்காக, தனது கிராண்ட் விட்டாரா ரக கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 9 முதல் இவ்வாண்டு ஏப்ரல் 29வரை தயாரிக்கப்பட்ட கார்கள் சிலவற்றில், எரிபொருள் இருப்பை காட்டும் இண்டிகேட்டர், எரிபொருள் இருப்பு மிகவும் குறைந்தால் எச்சரிக்கும் அமைப்பு ஆகியவற்றில் உற்பத்தியின்போதே பழுது ஏற்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக, காரில் எரிபொருள் இல்லாமலோ அல்லது குறைவாக இருந்தாலோ கூட, போதுமான அளவுக்கு இருப்பு உள்ளதாகவே இண்டிகேட்டர் காட்டும். இதனால் அதனை ஓட்டுபவர்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, மேற்கண்ட காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில், 39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப பெறுவதாக மாருதி கூறியிருக்கிறது. இவற்றை வாங்கியுள்ள வாடிக்கையாளர்களை மாருதி நிறுவனம் தொடர்பு கொள்ளும்.
அதேபோல, இந்த பிரச்னையை சந்திப்பவர்கள், அருகிலுள்ள மாருதி சர்வீஸ் சென்டர்களுக்கு காரை எடுத்து சென்று பரிசோதிக்கலாம்.
எரிபொருள் அளவை காட்டும் இண்டிகேட்டரில் பழுது இருந்தால் அதற்கு பதிலாக மாற்று உதிரிபாகம் கட்டணமின்றி பொருத்தப்படும்.
ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக மாருதி தெரிவித்துள்ளது. எனவே, தனது டீலர்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அதனை பயன்படுத்தி தங்கள் விட்டாரா காரை பரிசோதித்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை மாருதி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

