பொம்மை ஏற்றுமதி பாதிப்பு சீனாவுக்கு மாறும் ஆர்டர்கள் உற்பத்தியாளர் சங்கம் கவலை
பொம்மை ஏற்றுமதி பாதிப்பு சீனாவுக்கு மாறும் ஆர்டர்கள் உற்பத்தியாளர் சங்கம் கவலை
ADDED : நவ 16, 2025 01:44 AM

புதுடில்லி:இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால், நம்நாட்டின் பொம்மை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய பொம்மை ஏற்றுமதியாளர்கள் கணிசமான அளவு அமெரிக்க ஆர்டர்களை பெற்றனர். ஆனால், அமெரிக்காவின் அதீத வரிவிதிப்பின் காரணமாக விலையை குறைக்கவும் பேக்கேஜிங் முறைகளை மாற்றிக்கொள்ளவும் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய பொம்மை உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான அமிதாப் கார்பந்தா இதுகுறித்து கூறியுள்ளதாவது:
அடுத்த விழாக்காலத்தை முன்னிட்டு, அமெரிக்க இறக்குமதியாளர்கள் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து விடுவர். எனவே, நாங்கள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் அவற்றை பெற்று விடுவோம். ஆனால், இந்தாண்டு 50 சதவீத ஆர்டர்களே கிடைத்துள்ளன.
எங்களது அமெரிக்க வாடிக்கையாளர்கள் சீனா மற்றும் இதர நாடுகளை நாடத் துவங்கியுள்ளனர்.
தற்போதைய சூழலை சமாளிக்க நமது ஏற்றுமதியாளர்கள் பேக்கேஜிங் முறையை மாற்றியமைப்பது, சிறிய அளவிலான பொம்மைகளை தயாரிப்பது ஆகிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்க இறக்குமதியாளர்கள் வியட்நாம் தயாரிப்புகள் பக்கம் திரும்பாமல் இருக்க, தயாரிப்புகளில் மாற்றங்களை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வழக்கமாக கார்னிவல் உள்ளிட்ட விழாக்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு பொருட்கள் ஏப்ரல்- -- ஆகஸ்ட் மாதங்களில் தான் ஏற்றுமதியாகும். கடந்த ஆண்டில் மொத்தமாக 729 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாண்டில் 572 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏப்ரல்- - ஆகஸ்ட் காலகட்டத்திலேயே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டன.
சீனப்பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்திருந்த 145 சதவீத வரியை தவிர்க்க, அமெரிக்க இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்தே முன்கூட்டி கூடுதல் ஆர்டர்களை வழங்கி விட்டனர்.
அதன்படி, 78 சதவீத ஏற்றுமதி கடந்த 5 மாதங்களில் முடிவடைந்து விட்டதாலும் மிகையான வரிவிதிப்பாலும் அடுத்த ஆர்டர்கள் இல்லாத சூழல் இருப்பதாக பொம்மை தயாரிப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.

