தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது 'ஷாக்' கொடுத்த தென்கொரிய நிறுவனம் கைநழுவிப்போனது ரூ.1,720 கோடி திட்டம்
தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது 'ஷாக்' கொடுத்த தென்கொரிய நிறுவனம் கைநழுவிப்போனது ரூ.1,720 கோடி திட்டம்
ADDED : நவ 16, 2025 01:39 AM

சென்னை:தமிழகத்தில், 1,720 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க, மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த, 'ஹ்வாஸுங்' நிறுவனம், தனது முதலீட்டை ஆந்திராவுக்கு திருப்பியுள்ளது. இதற்கு, அம்மாநில அரசு ஒரு ஏக்கர் நிலத்தை, 99 காசு என்ற சொற்ப விலைக்கு வழங்க முன்வந்ததே முக்கிய காரணம்.
தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் சார்பில், துாத்துக்குடியில் கடந்த ஆகஸ்டில் மண்டல அளவிலான முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மாநாட்டில், 32,554 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
மனை ஒதுக்கவில்லை அதில், தென் கொரிய நாட்டை சேர்ந்த ஹ்வாஸுங் என்டர்பிரைசஸ், தோல் அல்லாத காலணி துறையில், 1,720 கோடி ரூபாய் முதலீட்டில், ஆலை அமைத்து 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்நிறுவனம், ஆலை அமைக்க, சென்னை அருகில் சலுகை விலையில் நிலம் வழங்குமாறு, வழிகாட்டி நிறுவனத்திடம் கேட்டது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொழில் பூங்காக்களில் நிலத்தின் மதிப்பு அதிகம் என்பதால், சலுகை விலையில் மனை ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், ஹ்வாஸுங் நிறுவனம், தமிழகத்தில் செய்ய இருந்த முதலீட்டை, ஆந்திர மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. இந்நிறுவனம் அம்மாநிலத்தின் குப்பத்தில் ஆலை அமைக்க உள்ளது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார்.
அரசு ஏற்கவில்லை இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு அதிகம். தேனி, தஞ்சை, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவோருக்கு சலுகை விலையில் நிலம் வழங்கப்படுகிறது.
இப்பகுதிகளில், ஹ்வாஸுங் நிறுவனத்திற்கு, ஒரு ஏக்கர், 30 லட்சம் ரூபாய்க்கு வழங்க, உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று அந்த நிறுவனம், தஞ்சாவூரில் தொழில் துவங்க முன்வந்தது.
இந்த சூழலில், ஆந்திர அரசு, திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள, தங்கள் மாநில எல்லை பகுதியில், ஒரு ஏக்கர், 99 காசுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதை ஏற்று அந்நிறுவனம் அங்கு செல்ல முடிவு செய்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும், அந்நிறுவன அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.
ஆந்திராவில் வழங்குவது போல் சலுகை விலை தருமாறு, நிறுவனம் தரப்பில் கேட்கப்பட்டது. சாத்தியமில்லாத காரணத்தால், அரசு அதை ஏற்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

