'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்' ரூ.491 கோடிக்கு ஒப்பந்தம்
'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்' ரூ.491 கோடிக்கு ஒப்பந்தம்
ADDED : அக் 22, 2024 10:24 AM

கொச்சின்: கொச்சியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகத்திடம் இருந்து, 491 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்சார் கண்காணிப்பு கப்பலை உருவாக்க, 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது.
இதனால், பங்குச் சந்தையில் கார்டன் ரீச் நிறுவன பங்கின் விலை, ஒரே நாளில் 6 சதவீதம் உயர்ந்து, 1,870 ரூபாயாக உள்ளது. இந்த கண்காணிப்பு கப்பலின் வடிவமைப்பு முதல் சோதனை வரை, அனைத்து பணிகளையும் இந்நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.
மேலும், ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் அடுத்த 36 மாதங்களுக்குள் இந்த கப்பலை வினியோகம் செய்ய வேண்டும்.
கார்டன் ரீச் நிறுவனம், கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு 100க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள், கடல்சார் கண்காணிப்பு கப்பல்கள் மற்றும் போக்குவரத்து கப்பல்களை வழங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின், மொத்த சந்தை மதிப்பு, 20,778 கோடி ரூபாயாக உள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது, பட்டறையாக இயங்கிக் கொண்டிருந்த இந்நிறுவனம், தற்போது 4,000த்திற்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் சரக்கு கப்பல்களை தயாரித்தது மட்டுமின்றி, பராமரிப்பும் சேவைகளையும் வழங்கி வருகிறது.