ADDED : பிப் 06, 2025 11:52 PM

சென்னை:சென்னையில் இம்மாதம் 21, 22ல் நடைபெற இருந்த உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை, கோவையில் வரும் மே மாதம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 10,000க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் சந்தை வாய்ப்பு, முதலீடு உள்ளிட்டவை கிடைக்க சிரமப்படுகின்றன. எனவே இவற்றுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு கிடைக்க, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வாயிலாக சென்னையில் இம்மாதம் 21, 22ல் உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை நடத்த இருப்பதாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
இதற்கான செலவுகளுக்கு முதற்கட்டமாக, 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாநாடு வரும் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்கள் மட்டுமின்றி; அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. எனவே, மதுரையில் ஸ்டார்ட் அப் திருவிழா சமீபத்தில் நடத்தப்பட்டு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன.
கல்லுாரி தேர்வுக்குப் பின் ஸ்டார்ட் அப் மாநாடு நடத்தினால், படிப்பை முடிக்கும் பலருக்கு பயன் உள்ளதாக அமையும். எனவே, சென்னையில் இம்மாதம் நடக்க இருந்த ஸ்டார்ட் அப் மாநாட்டை, கோவையில் வரும் மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.