ADDED : அக் 17, 2024 11:28 PM

புதுடில்லி:நாட்டின் பணவீக்கம் அதிகரித்ததில், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் ரசாயனங்கள் இறக்குமதி முக்கிய பங்கு வகித்துள்ளதாக, பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்வை கணக்கிடுவது, இறக்குமதி பணவீக்கம் எனப்படுகிறது. அந்த வகையில், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் ரசாயனங்கள், விலை உயர்ந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது, இறக்குமதி பணவீக்கத்தை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு, 2 சதவீதம் அதிகரித்தது.
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்ந்ததில், இறக்குமதி பணவீக்கமும் கணிசமான பங்களித்துள்ளது. கூடுதல் விலைக்கு இறக்குமதியாகும் பொருட்கள், நம்நாட்டில் விற்பனை செய்யப்படும்போது, மேலும் கூடுதல் விலையை எட்டுவதால், பணவீக்கம் அதிகரிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பரில் மட்டும் கிட்டத்தட்ட 85,000 கோடி ரூபாய்க்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 41,000 கோடி ரூபாய்க்கு நடந்த தங்கம் இறக்குமதியைவிட இது, இருமடங்கு ஆகும். பணவீக்கம் அதிகரித்ததில், தங்கம் இறக்குமதியில் ஏற்பட்ட விலை அதிகரிப்பால் இறக்குமதி பணவீக்கம் உயர்ந்ததும் முக்கிய பங்கு வகித்துள்ளது.