தங்கம் விலை உச்சம் தொட்டும் விற்பனையில் பாதிப்பில்லை
தங்கம் விலை உச்சம் தொட்டும் விற்பனையில் பாதிப்பில்லை
ADDED : ஜன 24, 2025 11:35 PM

சென்னை:தமிழகத்தில் தங்கம் சவரன் விலை, 60,000 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியும், விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என்ற அச்சம் காரணமாக, பலரும் தங்கம் வாங்கி வருவதே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவரின் அறிவிப்புகள் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்து உள்ளது.இதனால், அந்நாடுகளில் பங்குச் சந்தை சரிவை கண்டு வருவதால், உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர்.
உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டிலும் அதன் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.
இம்மாதம், 22ம் தேதி தமிழகத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 60,000 ரூபாயை தாண்டி, 60,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, 60,440 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த ஓராண்டில் மட்டும், சவரனுக்கு 13,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இருப்பினும் தங்கம் விற்பனையில் பாதிப்பு இல்லை.
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:அமெரிக்க அதிபர் டிரம்ப், தன் நாட்டின், 'பெடரல்' எனப்படும் மத்திய வங்கியிடம், வைப்பு நிதிக்கான வட்டியை குறைக்குமாறு தெரிவித்து உள்ளார்.இதனால், வைப்பு நிதியில் லாபம் கிடைக்காது என்பதால், முதலீட்டாளர்கள் வைப்பு நிதியில் இருந்து நிதியை திரும்ப எடுத்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும். அச்சம் காரணமாக, மக்கள் தற்போது தங்கம் வாங்கி வருகின்றனர். இதனால், தங்கம் விற்பனை வழக்கம் போல் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.