நீக்கிய செயலிகளை மீண்டும் அனுமதிக்க 'கூகுள்' ஒப்புதல்
நீக்கிய செயலிகளை மீண்டும் அனுமதிக்க 'கூகுள்' ஒப்புதல்
ADDED : மார் 06, 2024 01:26 AM

புதுடில்லி:நீக்கப்பட்ட செயலிகளை மீண்டும் பிளேஸ்டோரில் கொண்டு வர, கூகுள் ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சேவை கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து, கூகுள் நிறுவனம் கடந்த வாரம், 'பாரத் மேட்ரிமோனி' உள்ளிட்ட, இந்தியாவின் 10 நிறுவன செயலிகளை அதன் பிளேஸ்டோரில் இருந்து நீக்கியது.
இதற்கு நீக்கப்பட்ட நிறுவனங்கள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்த நடவடிக்கை நியாயமற்றது எனவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தேவைகள் பாதுகாக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கூகுள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிரச்னை மற்றும் கோரிக்கைகளை கலந்து ஆலோசிப்பதற்காக, நேற்று முன்தினம் அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனை கூட்ட முடிவில், கூகுள், நீக்கப்பட்ட செயலிகளை மீண்டும் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது:
கூகுள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றன. இதில், பல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன.
நீக்கப்பட்ட செயலிகளை மீண்டும் கொண்டு வர, கூகுள் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண விவகாரத்தில், கூகுள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், வரும் மாதங்களில், நீண்ட கால தீர்வை எட்டும் என்று நம்புகிறோம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய இணையதள பயன்பாட்டாளர்களை கொண்ட சந்தையாக உள்ளது. 'மெட்டா, கூகுள்' போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய சந்தையை எளிதில் தவிர்க்க இயலாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

