மொபைல் செயலிகளுக்கு மீண்டும் அனுமதி அரசின் அதிருப்தியால் பின்வாங்கிய கூகுள்
மொபைல் செயலிகளுக்கு மீண்டும் அனுமதி அரசின் அதிருப்தியால் பின்வாங்கிய கூகுள்
ADDED : மார் 03, 2024 02:28 AM

புதுடில்லி:இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயலிகள் நீக்கத்தை அனுமதிக்க முடியாது என, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியாக தெரிவித்துள்ள நிலையில், கூகுள் தன் முடிவிலிருந்து பின்வாங்கி உள்ளது.
தங்கள் கட்டண கொள்கைகளுக்கு இணங்காததை காரணம் காட்டி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, இந்தியாவின் பிரபலமான பாரத் மேட்ரிமொனி செயலி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் செயலிகளை கடந்த வெள்ளியன்று கூகுள் நிறுவனம் நீக்கியது.
இந்நடவடிக்கை, மேலும் சில நிறுவனங்கள் மீதும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது. இதற்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதையடுத்து, இந்நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இந்திய பொருளாதாரத்திற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கியமானவை. அந்நிறுவனங்களின் தலைவிதியை, எந்த ஒரு பெரிய தொழில்நுட்பமும் முடிவு செய்து விட முடியாது.
அரசு தன் கொள்கையில் மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்கள் மற்றும் கூகுள் நிறுவனத்துடன் அடுத்த வாரம் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் இப்பிரச்னைகள் குறித்து பேசி தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, 'நவுக்ரி, 99 ஏக்கர்ஸ், பாரத் மேட்ரிமொனி' உள்ளிட்ட சில செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளன.
'இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவிதியை, எந்த ஒரு பெரிய தொழில்நுட்பமும் முடிவு செய்து விட முடியாது'

