விசைத்தறிகள் நவீனமயம் ரூ.30 கோடி ஒதுக்கியது அரசு
விசைத்தறிகள் நவீனமயம் ரூ.30 கோடி ஒதுக்கியது அரசு
ADDED : டிச 12, 2025 01:13 AM

பல்லடம்: விசைத்தறிகளை நவீனப்படுத்த, 30 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதால், துணி உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக,விசைத்தறியாளர்கள் கருதுகின்றனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வாயிலாக, தினசரி, ஒரு கோடி மீட்டர் காடா துணி உற்பத்தியாகிறது.
நலிவடைந்த விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் நோக்கில், தறிகளை நவீனப்படுத்த வேண்டும் என, விசைத்தறியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, விசைத்தறிகளை நவீனப்படுத்த, 30 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இது குறித்து, திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது: கடந்த, 2014ம் ஆண்டு முதல் விசைத்தறி தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. நவீன தறிகளுடன் போட்டி போட முடியாமல், விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
எண்ணற்ற விசைத்தறிகள், பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டன. விசைத்தறிகளை காப்பாற்ற, தறிகளை நவீனப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
இதன்படி, சாதா தறிகளை, நாடா இல்லாத தறிகளாக நவீனப்படுத்த, தறி ஒன்றுக்கு, 1 லட்சம் ரூபாய் வீதம், 3 ஆயிரம் விசைத்தறிகளுக்கு, 30 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
நவீன தறிகளுடன் போட்டி போடும் வகையில், கடந்த ஆண்டு, 5 லட்சம் விசைத்தறிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பேனல் போர்டுகளை, மத்திய அரசு, முழு மானியமாக வழங்கியது, நவீனமயமாக்கலின் ஒரு துவக்கமாக இது அமைந்தது.
தற்போது, தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் அமைக்கப்படவுள்ள 'ரேப்பியர்' கிட் எனப்படும் உபகரணத்தின் உதவியுடன், சுல்ஜர் தறிகளைப் போன்றே, விசைத்தறிகள் அனைத்தும், நாடா இல்லாத தறிகளாக நவீனப்படுத்தப்பட உள் ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சாதா தறிகளை, நாடா இல்லாத தறிகளாக நவீனப்படுத்த, தறி ஒன்றுக்கு, 1 லட்சம் ரூபாய் வீதம், 3 ஆயிரம் விசைத்தறிகளுக்கு, 30 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு 5 லட்சம் விசைத்தறிகளுக்கு, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பேனல் போர்டுகளை, மத்திய அரசு முழு மானியமாக கடந்த ஆண்டு வழங்கியது

