'சீன கட்டுமான பொருட்கள் இறக்குமதிக்கு தடை வேண்டும்'
'சீன கட்டுமான பொருட்கள் இறக்குமதிக்கு தடை வேண்டும்'
ADDED : டிச 11, 2025 01:12 AM

சென்னை : சீனாவில் இருந்து கட்டுமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இறக்குமதியை தடை செய்ய, மத்திய அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழக சிறு, குறுந்தொழில் துறையினர் கூறியதாவது:
நம் நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்டீல், பிளாஸ்டிக், ரசாயனம் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சீனாவில் இருந்து இப்பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், கூடுதல் வரிகளும் விதிக்கப்படுகின்றன.
மேலும், பெரிய நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டங்களும் உள்ளன. அதேநேரம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இந்த திட்டங்கள் இல்லை.
தமிழகம் உட்பட நாடு முழுதும் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், அதிகளவில் உற்பத்தி செய்யும் வாகன உதிரிபாகங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், கட்டுமான துறையில் அதிகளவில் பயன்படும் இன்ஜினியரிங் பொருட்கள் போன்றவை, சீனாவில் இருந்தும் கட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன.
இவை, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களை பாதிப்பதுடன், உள்நாட்டு உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே, சிறுதொழில்கள் அதிகளவில் தயாரிக்கும் பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

