ADDED : டிச 11, 2025 01:12 AM

புதுடில்லி: நம் நாட்டின் ஸ்டீல், சிமென்ட் துறைகளில், கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சிகளில், ஸ்வீடனை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுடன், மத்திய அரசு கைகோர்த்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நம் நாடு, கார்பன் உமிழ்வை வரும் 2070ம் ஆண்டுக்குள் பூஜ்யமாக்கும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் வளர்ச்சி மற்றும் காலநிலை நோக்கங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அதிக மாசை வெளியிடும் ஸ்டீல், சிமென்ட் துறைகளில் கார்பன் அற்ற அல்லது குறைவான கார்பன் வெளியீட்டைக் கொண்டதாக மாற்றும் வகையில் புதிய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 'டாடா ஸ்டீல், ஜே.கே சிமென்ட், அம்புஜா சிமென்ட்ஸ், ஜிண்டால் ஸ்டீல், பிரிசம் ஜான்சன், செம்விஷன்' ஆகிய நிறுவனங்கள், ஸ்வீடனை சேர்ந்த 'காந்தல், ஸ்வெரியம்' ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து, ஏழு புதிய திட்டங்களை துவங்கியுள்ளன.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஸ்வீடனின் ஸ்வீடிஷ் எரிசக்தி முகமை ஆகியவற்றின் நிதியுதவியின் கீழ் துவங்கப்பட்டுள்ள இந்த கூட்டு முயற்சியானது, ஆரம்பத்தில் பரிசோ தனை நிலையில் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
உலகளவின் கார்பன் வெளியீட்டில், மூன்றில் ஒரு பங்கு கனரக தொழில்களால் ஏற்படுகிறது
இந்தியாவின் ஸ்டீல், சிமென்ட் துறை, 10--12 சதவீதத்துடன், அதிக கார்பன் உமிழ்வுக்கு காரணமாக இருக்கிறது.

