வெள்ளி, முந்திரி, கோரைப்பாய் ஆலைக்கு தொழில் குழுமம் அமைக்க அரசு ஒப்புதல் பெரம்பூர், அரியலுார், திருச்சி, பெருந்துறை தேர்வு
வெள்ளி, முந்திரி, கோரைப்பாய் ஆலைக்கு தொழில் குழுமம் அமைக்க அரசு ஒப்புதல் பெரம்பூர், அரியலுார், திருச்சி, பெருந்துறை தேர்வு
ADDED : ஜூலை 23, 2025 10:33 PM

சென்னை:தமிழகத்தில் நான்கு தொழில் குழுமங்களை அமைக்க, சிட்கோ நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டையை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது. மேலும், ஒரு இடத்தில் ஒரே தொழிலை செய்யும் பல நிறுவனங்கள் பயன்பெறுவதற்கு, குழுமம் எனப்படும் பொது வசதி மையம் அமைக்கவும் நிதியுதவி செய்கிறது.
அதன்படி, சென்னை பெரம்பூரில், வெள்ளி கலை பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, 100க்கும் மேற்பட்ட குறுந்தொழில்கள் பயன்பெற, வெள்ளி கலை பொருட்கள் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்க, 'சிட்கோ' ஒப்புதல் அளித்துள்ளது.
இது தவிர, அரியலுார் மாவட்டம், செந்துரை தாலுகாவில் உள்ள பரணத்தில், முந்திரி பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, 2.84 கோடி ரூபாயில் மையம் மற்றும் திருச்சியில் முசிறி தாலுகாவில், 3 கோடி ரூபாயில் கோரைப்பாய் குழும மையம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு, பெருந்துறை தாலுகா சீனாபுரத்தில், 7 கோடி ரூபாயில் நெசவு குழும பொது வசதி மையத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
70% வரை மானியம் ஒவ்வொரு குழுமத்திற்கான மொத்த திட்ட செலவில், 60 - 70 சதவீத நிதியை மானியமாக, 'சிட்கோ' வழங்கும். இந்த நிதியில், பொது வசதி மையத்துக்கு தேவைப்படும் இயந்திர தளவாடங்கள் வாங்கப்படும். அவற்றை குழுமத்தில் உள்ள நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும்.