பழைய பொருட்கள் விற்பனை ரூ.800 கோடி ஈட்டியது அரசு 'சந்திரயான் - 3' திட்ட செலவை விட அதிகம்
பழைய பொருட்கள் விற்பனை ரூ.800 கோடி ஈட்டியது அரசு 'சந்திரயான் - 3' திட்ட செலவை விட அதிகம்
ADDED : நவ 10, 2025 12:48 AM

புதுடில்லி: கடந்த அக்டோபரில் -மத்திய அரசு அலுவலகங்களில் சேகரித்த பழைய பொருட்கள் விற்பனை வாயிலாக, 800 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இது, 'சந்திரயான் - -3' திட்டச் செலவான 615 கோடி ரூபாயை விட அதிகம்.
அரசு அலுவலகங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் துாய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, அதில் கிடைக்கும் பழைய பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், கடந்த அக்டோபரில் நாடு முழுதும், 11.58 லட்சம் அரசு அலுவலகங்களில் துாய்மை இயக்கம் நடந்தது. அப்போது, 29 லட்சம் பழைய கோப்புகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.
கடந்த 2021 முதல் இந்தாண்டு வரை, 23.62 லட்சம் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட துாய்மை இயக்கத்தின் வாயிலாக 166.96 லட்சம் கோப்புகள் கண்டறியப்பட்டு, அவை தேவைக்கேற்றபடி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டன. அப்போது சேகரிக்கப்பட்ட பழைய பொருட்கள் விற்பனை வாயிலாக, மத்திய அரசு 4,097.24 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

