கிராமங்களில் 'ஸ்டார்ட் அப்' அரசு - எச்.சி.எல்., ஒப்பந்தம்
கிராமங்களில் 'ஸ்டார்ட் அப்' அரசு - எச்.சி.எல்., ஒப்பந்தம்
ADDED : மே 17, 2025 12:14 AM

சென்னை:தமிழக கிராமங்களில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் துவக்குவதை ஊக்குவிக்க, தமிழக அரசும், எச்.சி.எல்., அறக்கட்டளையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
சென்னை, கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் நகரங்களில் செயல்படுகின்றன. கிராமங்களிலும் புத்தொழில் நிறுவனங்கள் துவக்குவதை அரசு ஊக்குவித்து வருகிறது.
இதற்காக, ஸ்டார்ட் அப் டி.என்., மற்றும் எச்.சி.எல்., அறக்கட்டளை இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், கிராமங்களில் தொழில் துவங்குவதற்கு கருத்துரு வைத்திருப்பவர்களை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், வட்டார புத்தொழில் மையங்கள் வாயிலாக கண்டறியும்.
அவர்களில், சிறந்த கருத்துரு தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு, 100 பேர் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு, 300 பேர் புத்தொழில் நிறுவனங்களை துவக்க ஊக்குவிக்கப்படும்.
அந்த தொழில் நிறுவனங்களை சட்டப்படி பதிவு செய்வதற்கு, தலா ஒருவருக்கு, 10,000 ரூபாய் ஸ்டார்ட்அப் டி.என்., வாயிலாக நிதியுதவி வழங்கப்படும். புதிய தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு தொடர்பாக பயிற்சிகளும் அளிக்கப்படும்.