மார்ச்சுக்குள் கார் தயாரிப்பை துவக்க போர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சு
மார்ச்சுக்குள் கார் தயாரிப்பை துவக்க போர்டு நிறுவனத்துடன் அரசு பேச்சு
ADDED : டிச 27, 2024 01:31 AM

சென்னை:சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில், மீண்டும் 'போர்டு' கார் தயாரிப்பை விரைந்து துவக்குவது தொடர்பாக, அந்நிறுவனத்துடன் தமிழக அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு மோட்டார் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் உள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு, இரண்டு லட்சம் கார்களை தயாரிக்கும் செய்யும் திறன் உடையது.
மேலும், 3.40 லட்சம் இன்ஜின்கள் உற்பத்தி செய்யும் திறனும் கொண்டது.
கடந்த 2022ல் இந்த ஆலையில் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. அங்கு பணிபுரிந்த ஏராளமானோர் வேலை இழந்தனர். ஆலையை மீண்டும் துவக்குமாறு அரசு அதிகாரிகள் போர்டு நிறுவனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அமெரிக்க தொழில் நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் குழு, கடந்த ஆகஸ்ட் இறுதியில் அந்நாட்டிற்கு சென்றது.
அக்குழு, போர்டு நிறுவன உயரதிகாரிகளை சந்தித்து, மறைமலை நகரில் உள்ள ஆலையை மீண்டும் துவக்க வலியுறுத்தியது.
அதை போர்டு நிறுவனமும் ஏற்று, ஒப்புதல் கடிதம் வழங்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்ததும், ஆலையை இயக்கும் பணிகளை துவக்க முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களான நிலையில், ஆலையை இயக்குவது குறித்து, போர்டு நிறுவனத்துடன் அதிகாரிகள் தற்போது பேச்சு நடத்தி வருகின்றனர்.
வரும் மார்ச்சுக்குள் ஆலை மீண்டும் செயல்பட முயற்சி எடுக்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.