குறுந்தொழில் கூடுதல் முதலீட்டு மானியம் 10 லட்சம் ரூபாயாக அதிகரித்தது அரசு
குறுந்தொழில் கூடுதல் முதலீட்டு மானியம் 10 லட்சம் ரூபாயாக அதிகரித்தது அரசு
ADDED : ஜூலை 09, 2025 10:28 PM

சென்னை:குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு, இயந்திர தளவாடங்கள் மதிப்பில் வழங்கப்படும் கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பை, 5 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு நடுத்தர பிரிவில், புதிதாக தொழில் துவங்க பல்வேறு சுயவேலைவாய்ப்பு திட்டங்களை, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிக ஆணையரகம் செயல்படுத்துகிறது. இது, மானியம் உள்ளிட்ட பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குகிறது.
முதலீட்டு மானியம்
மத்திய அரசின், 'உத்யம்' தளத்தில் தமிழகத்தில் இருந்து பதிவு செய்துள்ள, 33.62 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில், 33 லட்சம் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன.
தமிழகத்தில் எந்த பகுதியிலும் துவங்கப்படும் புதிய குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு, இயந்திர தளவாடங்களின் மதிப்பில், 25 சதவீதம் முதலீட்டு மானியமாக அதிகபட்சம், 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இதனுடன் சேர்த்து, கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, தளவாடங்களின் மதிப்பில் கூடுதலாக, 10 சதவீதம் அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மின் கட்டணம் உயர்வு, சம்பளம் உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட செலவுகளால், குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஊக்குவிப்பு சலுகை வழங்குமாறு குறுந்தொழில்முனைவோர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பதிவேற்றம்
இதையடுத்து, கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு தளவாடங்கள் வாங்கிய ரசீது உள்ளிட்ட விபரங்களை, தொழில் வணிக ஆணையரக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால், அதை பரிசீலித்து, மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.