மாசு ஏற்படுத்தாத தொழில்கள் எண்ணிக்கையை அதிகரித்தது அரசு ஐ.டி., முதல் டீ கடை வரை பயனடையலாம்
மாசு ஏற்படுத்தாத தொழில்கள் எண்ணிக்கையை அதிகரித்தது அரசு ஐ.டி., முதல் டீ கடை வரை பயனடையலாம்
UPDATED : ஆக 09, 2025 10:24 AM
ADDED : ஆக 09, 2025 01:11 AM

சென்னை:தமிழக அரசு, 'வெள்ளை' வகையில் இடம்பெறும் தொழில்களின் பட்டியலை, 36-லிருந்து 609 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு தொழிலும், அதில் இருந்து வெளியேறும் மாசு குறியீட்டு அளவை பொறுத்து, 'சிகப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை' என, நான்கு விதமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், வெள்ளை வகை தொழில்களின் எண்ணிக்கையை 36-லிருந்து 609-ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
நான்கு வகை தொழில்கள்:
சிகப்பு: அதிகளவில் மாசு ஏற்படுத்துபவை
ஆரஞ்சு: நடுத்தர அளவில் மாசு ஏற்படுத்துபவை.
பச்சை : குறைந்த அளவில் மாசு ஏற்படுத்துபவை
வெள்ளை: மிகக் குறைந்த அல்லது சுத்தமாகவே மாசு இல்லாத தொழில்கள்.
புதிய அறிவிப்பின்படி மாற்றம்
மாசு ஏற்படுத்தாத அல்லது மிகக் குறைந்த மாசு ஏற்படுத்தும் வெள்ளை வகை தொழில்களுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதி பெறத் தேவையில்லை. இந்த வகை தொழில்கள், தங்கள் செயல்பாடுகள் குறித்த தகவலை மட்டும் வாரியத்துக்குத் தெரிவித்தால் போதுமானது.
வெள்ளை வகையில் சேர்க்கப்பட்டுள்ள சில தொழில்கள்:
* ஐ.டி., நிறுவனங்கள் (20-க்கும் குறைவான ஊழியர்களுடன்)
* கைவினைப் பொருட்கள் தயாரிப்பு
* ஈரமில்லா செயல்முறை கொண்ட ஆடைகள் தயாரிப்பு
* வீட்டுப் பொருட்கள் மற்றும் சமையல் சாதனங்கள் தயாரிப்பு
* இசைக்கருவிகள் தயாரிப்பு
* சிறு உணவகங்கள் (20 இருக்கைகள் வரை)
* டீ, காபி கடைகள்
* சைக்கிள், வாகனப் பாகங்கள் பொருத்துதல்
* மீன் வலைகள் தயாரித்தல்
* காகிதக் கழிவு மற்றும் வாகனக் கழிவு சேகரிப்பு
இந்த நடவடிக்கை, தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.