புதிய பி.எப்., கணக்கு துவங்கியோர் நவம்பரில் 14.63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அதிகரிப்பதாக அரசு தகவல்
புதிய பி.எப்., கணக்கு துவங்கியோர் நவம்பரில் 14.63 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அதிகரிப்பதாக அரசு தகவல்
ADDED : ஜன 24, 2025 10:16 PM

புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமான இ.பி.எப்.ஓ.,வில், கடந்த நவம்பரில் புதிதாக 14.63 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வேலைவாய்ப்பு அதிகரித்ததையும், முதல்முறை வேலையில் சேர்வோர் அதிகம் என்பதையும் இது உணர்த்துவதாக கூறியுள்ளது.
இது குறித்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வருங்கால வைப்பு நிதி தரவுகளின்படி, கடந்த நவம்பரில் நிகர மதிப்பில் 14.63 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். முந்தைய ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 4.88 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில், 9.07 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக, 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 5.86 லட்சம் பேர் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இதற்கு, முதல்முறை வேலைக்கு சேர்வோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே காரணமாகும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

