தொழில் துவங்க எளிதாக அனுமதி ஆன்லைனில் கருத்து கேட்கும் அரசு
தொழில் துவங்க எளிதாக அனுமதி ஆன்லைனில் கருத்து கேட்கும் அரசு
ADDED : ஜூலை 12, 2025 10:41 PM

சென்னை:தமிழகத்தில் தொழில் துவங்க அனுமதி அளிக்கப் படுவதை எளிதாக்க, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, தொழில் துறையினரிடம், 'ஆன்லைனில்' கருத்து கேட்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் பெரிய தொழில் நிறுவனங்களும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் ஆலைகளை அமைக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளிடம் அனுமதி, ஒப்புதல், தடையில்லா சான்று பெற வேண்டும்.
இவற்றை ஒரே இடத்தின் கீழ் ஒற்றைச்சாளர இணையதளம் வாயிலாக அரசு வழங்குகிறது. இந்த இணையதளத்தை, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் நிர்வகிக்கிறது.
அதில், 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளின், 191 வணிகம் தொடர்பான அனுமதி, ஒப்புதல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு சேவைக்கும் விண்ணப்பித்த நாளில் இருந்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒப்புதல், அனுமதி தர காலக்கெடு உள்ளது.
அதை பின்பற்றாமல் தாமதம் செய்யப்படுவதால், தொழில் துறையினர் அதிருப்தி அடைகின்றனர்.
இந்நிலையில், தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில், தற்போது நடைமுறை யில் இருப்பதை விட, எளிய முறையை பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, தொழில் துறையினரிடம், 'ஆன்லைனில்' கருத்து கேட்கும் பணியில் வழிகாட்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, இதுதொடர்பான கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனை, கருத்து வழங்குமாறு, மின்னஞ்சல் வாயிலாக தமிழகத்தின் முக்கிய தொழில் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.