ADDED : பிப் 01, 2024 12:20 AM

புதுடில்லி:நாட்டின் உள்கட்டமைப்பு இடைவெளியை குறைக்க, மத்திய அரசு மூலதன செலவினத்தில் கவனம் செலுத்த வேண்டும் என, நிடி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் தனியார் முதலீடு பலவீனமாகவே இருப்பதால், அரசின் மூலதன செலவினம் மிகவும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்திய பொருளாதாரத்தை பாதித்து வந்த உள்கட்டமைப்பு இடைவெளியை குறைக்க, மத்திய அரசு தொடந்து மூலதன செலவினத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால், தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டிலும் மூலதன செலவினத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மூலதன செலவினத்தை அதிகரித்தாலும், வரி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இடையிலான விகிதத்தில் ஏற்பட்டுள்ள சிறிய முன்னேற்றம் காரணமாக, அரசு நிதி ஒருங்கிணைப்பை பராமரிக்க முடியும். மேலும், மறைமுக வரி வருவாய் மற்றும் நேரடி வரி வருவாயின் அடிப்படை விரிவடைந்துள்ளதும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.