வேளாண் பொருள் ஏற்றுமதி அதிகரிக்க 100 ஸ்டார்ட்அப்களுக்கு அரசு பயிற்சி
வேளாண் பொருள் ஏற்றுமதி அதிகரிக்க 100 ஸ்டார்ட்அப்களுக்கு அரசு பயிற்சி
UPDATED : செப் 04, 2025 10:48 AM
ADDED : செப் 04, 2025 01:10 AM

புதுடில்லி:நாட்டின் வேளாண் உணவு பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க, 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பயிற்சியளிக்க 'பாரதி' எனும் திட்டத்தை, ஏ.பி.இ.டி.ஏ., எனப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் துவங்கி உள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை 4.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க ஏ.பி.இ.டி.ஏ., இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வேளாண் உணவு, வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைத்து, இளம் தொழில்முனைவோருக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
செப்டம்பரில் இருந்து 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இந்த திட்டம் துவங்கப்படுகிறது. இதில் உயர் மதிப்பு பிரிவுகளான புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், ஆர்கானிக் உணவுகள் மற்றும் சூப்பர் உணவுகள், கால்நடை, ஆயுர்வேத தயாரிப்புகள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
மேலும், வேளாண் உணவுப்பொருட்களில் புதுமைகள் புகுத்துவோர் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கு வோரை இணைக்கும் திட்டமாக செயல்படும்.
வேளாண் உணவு பொருட்கள் துறையில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஏ.பி.இ.டி.ஏ., இணையதளமான https://apeda.gov.in/ வாயிலாக விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படும். இதில், தேர்வாகும் 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி சார்ந்த பயிற்சிக்கு இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.