ADDED : பிப் 03, 2024 12:57 AM

புதுடில்லி:'பாரத் பிராண்டு' அரிசியை, கிலோ 29 ரூபாய் என சில்லரை விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதையடுத்து, அரிசி கையிருப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்குமாறு, வணிகர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அரிசி விலை உயர்வால் சாமானியர்கள் படும் சிரமங்களை குறைக்கும் வகையில், அடுத்த வாரம் முதல் சில்லரை விற்பனையில் பாரத் பிராண்டு அரிசியை, கிலோ 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அரிசி கையிருப்பு குறித்து தகவல்களை அளிக்குமாறு வணிகர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
விலை அதிகரிப்பு
இது குறித்து, மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா கூறியதாவது:
அரிசி ஏற்றுமதிக்கு பல்வேறு வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், கடந்த ஓராண்டில், அரிசியின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
விலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக, சில்லரை விற்பனை சந்தையில், மானிய விலையில் வழங்கப்படும் பாரத் அரிசியை, கிலோ 29 ரூபாய்க்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.
'இ - காமர்ஸ்' சந்தைகள் வாயிலாகவும் அரிசி விற்பனை செய்யப்படும்.
பாரத் அரிசி அடுத்த வாரம் முதல் 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும். முதல்கட்டமாக, சில்லரை சந்தை விற்பனைக்காக 5 லட்சம் டன் அரிசியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏற்கனவே அரசு, 'பாரத் ஆட்டா'வை கிலோ 27.50 ரூபாய்க்கும், 'பாரத் பருப்பு'களை கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது.
கட்டுப்பாடுகள் தொடரும்
அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை அகற்ற அரசிடம் எந்த திட்டமும் இல்லை. விலை குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடரும்.
சில்லரை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்டோர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அரிசி கையிருப்பு குறித்து தகவல் தர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரிசி கையிருப்புக்கு வரம்புகள் விதிப்பது குறித்து இதுவரை பரிசீலிக்கவில்லை. ஆனால், விலை குறைப்பிற்காக அரசு அனைத்து வழிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஓராண்டில், அரிசியின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது

