தொழில்துறை மாற்றங்களுக்கேற்ப திட்டங்களை வகுக்க அரசு ஆய்வு
தொழில்துறை மாற்றங்களுக்கேற்ப திட்டங்களை வகுக்க அரசு ஆய்வு
ADDED : பிப் 09, 2024 01:18 AM

சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெற, மோட்டார் வாகனம் உட்பட முக்கிய துறைகளில், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் ஏற்பட உள்ள மாற்றங்களை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப புதிய திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில், வேளாண் துறைக்கு அடுத்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுஉள்ளது.
இதற்காக, வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல்; மின்னணு; தோல், காலணி பொருட்கள்; விண்வெளி மற்றும் பாதுகாப்பு; ஜவுளி ஆயத்த ஆடைகள்; ஜவுளி, ஜவுளி சார்ந்த தொழில்நுட்பம்; மோட்டார் வாகனம், மோட்டார் வாகன உதிரிபாகம்.
மின்சார வாகனம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம்; ரசாயனம் உள்ளிட்ட தொழில் துறைகளில் அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்பெற, வரும் காலங்களில் தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அறிக்கை தயாரிக்கப்படும். அதற்கு ஏற்ப, புதிய கொள்கைகள், திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிப்பது போன்றவை செயல்படுத்தப்படும். டிஜிட்டல் வணிகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

