சுற்றுச்சூழல் ஆதரவு பொருட்களுக்கு தரமுத்திரை: அக்மார்க் போல அரசு வழங்கும் 'ஈகோமார்க்'
சுற்றுச்சூழல் ஆதரவு பொருட்களுக்கு தரமுத்திரை: அக்மார்க் போல அரசு வழங்கும் 'ஈகோமார்க்'
ADDED : அக் 03, 2024 02:56 AM

புதுடில்லி:சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, அப்பொருட்களுக்கு 'ஈகோமார்க்' என்ற பெயரில் தர நிர்ணய சான்று பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சந்தையில், பொருட்களின் தரத்தை நுகர்வோர் உறுதிப்படுத்திக் கொள்ள உதவியாக, 'டிரேட்மார்க், அக்மார்க்' போன்ற தர நிர்ணய முத்திரைகளை, தயாரிப்பாளர்களின் பொருட்களுக்கு அரசு வழங்கி வருகிறது.
அறிமுகம்
அந்த வரிசையில், தற்போது பிரபலமாகி வரும் சுற்றுச்சூழலுக்கு நட்பான பொருட்களின் தரத்தையும் நுகர்வோர் உறுதிப்படுத்தி வாங்கும் வகையில், ஈகோமார்க் முத்திரையை அரசு அறிமுகம் செய்துள்ளது.
உணவு, அலங்காரப் பொருட்கள், குளியல் சோப், சலவை சோப், பவுடர், பெயின்ட் உட்பட பலவற்றுக்கு, அவற்றின் தயாரிப்பாளர்கள் ஈகோமார்க் முத்திரையை பெறலாம் என, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஈகோமார்க் முத்திரை வழங்குவதன் வாயிலாக, சுற்றுச்சூழல் ஆதரவு பொருட்களை நுகர்வோர் அறிந்து வாங்கி பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்கள் தயாரிப்பில், நிறுவனங்களையும் இது ஊக்கப்படுத்தும் என்றும்; இதன் வாயிலாக, 'கிரீன் இண்டஸ்ட்ரீஸ்' எனப்படும் பசுமை ஆதரவு நிறுவனங்கள் பெருகும் என்றும் கூறியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கிலான பொருட்கள் குறித்து தவறான தகவல்கள், மோசடி விற்பனை ஆகியவற்றை இந்த தரநிர்ணய முத்திரை தடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.
ஐ.எஸ்.ஐ., முத்திரை போன்று, ஈகோமார்க் முத்திரையை பிரபலப்படுத்த உள்ளதாகவும், இதன் வாயிலாக, மறுசுழற்சி பொருட்களின் தயாரிப்பு அதிகரித்து, குப்பை கழிவுகள் சேருவதை தவிர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
ஈகோமார்க் வழங்க, ஒரு பொருளின் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் துவங்கி, முழு தயாரிப்பு வரை, சுற்றுச்சூழல் ஆதரவு அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும், மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் மூலப்பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கேற்ப ஈகோமார்க் முத்திரை பெற விரும்பும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்து, உறுதி செய்து, தரமுத்திரை அளிக்கப்பட்டதும், மூன்று ஆண்டுகளுக்கு இது செல்லத்தக்கது என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும்
மோசடி பொருட்கள் விற்பனை குறையும்
பசுமை ஆதரவு நிறுவனங்கள் பெருகும்
மறுசுழற்சி பொருட்களின் தயாரிப்பு அதிகரிக்கும்
டால்கம் பவுடர், ஷாம்பு, சோப், டூத் பவுடர், டூத் பேஸ்ட், ஹேர் ஆயில், நெயில் பாலிஷ், ஆப்டர்ஷேவ் லோஷன், ஷேவிங் கிரீம், ஐ ப்ரோ பென்சில், லிப்ஸ்டிக், சலவை சோப், சலவை பவுடர், சலவை திரவம், சமையல் எண்ணெய், டீ, காபி, டிவி, பிரிஜ், மிக்சி, கெய்ஸர், அயன்பாக்ஸ், டோஸ்ட்டர், கூலர், பேன், ஜவுளி ரகங்கள், பெயின்ட்.

