பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியே வாருங்கள் தொழில் துறையினருக்கு கோயல் வேண்டுகோள்
பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியே வாருங்கள் தொழில் துறையினருக்கு கோயல் வேண்டுகோள்
ADDED : ஆக 31, 2025 01:17 AM

புதுடில்லி:உலகம் முழுதும் உள்ள வாய்ப்புகளில் ஆர்வம் காட்டாமல், உள்நாட்டு சந்தையை பாதுகாப்பானதாக கருதி திருப்தி கொள்வது ஏன் என, தொழில் துறையினருக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., டில்லியில் நடத்திய இந்தியா, யு.ஏ.இ., வர்த்தக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தொழில் துறையினர், நாட்டின் 140 கோடி நுகர்வோரைக் கொண்ட உள்நாட்டு சந்தையை தங்கள் பாதுகாப்பு பகுதியாக கருதுவது ஏன் என அடிக்கடி நினைப்பதுண்டு. உள்நாட்டு வணிகத்தில் அதிக லாபம் கிடைப்பதால், உலகம் முழுதும் உள்ள வாய்ப்புகளை அவர்கள் பார்ப்பதில்லை.
அரிசி ஏற்றுமதியாளராக உள்ள நம்நாடு, ஏன் அதிலிருந்து தயாரிக்கும் பொரியையோ, துரித உணவு பொருட்களையோ மதிப்பு கூட்டு பொருளாக தயாரித்து, உலக சந்தையில் வணிகம் செய்வது மிகக் குறைவாக இருக்கிறது?
இரும்புத் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாம், உயர் தரமான உருக்கு உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.
நாட்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 7.80 சதவீதம் என்ற உயர்வை எட்டியுள்ள நிலையில், இப்போது தெரிவித்த கருத்துகளை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும், தொழில் துறையினர் எதிர்மறையாக கருதக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.