'சிப்காட்' தொழில் பூங்காக்களில் குறைகேட்பு கூட்டம் துவங்கியது
'சிப்காட்' தொழில் பூங்காக்களில் குறைகேட்பு கூட்டம் துவங்கியது
ADDED : மார் 05, 2024 12:08 AM

சென்னை : ''சிப்காட் தொழில் பூங்காக்களில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் புகார் மீது, 14 நாட்களில் தீர்வு காணப்படும்; தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் புகார் அளிக்கலாம்,'' என, சிப்காட் நிறுவன மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில், பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் காணப்படும் பிரச்னைக்கு தீர்வு காண, 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' என்ற குறைகேட்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் மாதந்தோறும் முதல் திங்களன்று நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கூட்டம் சிப்காட் தொழில் பூங்காக்களில் நேற்று துவங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை பூங்காவில் நடந்த கூட்டத்தில், கண்காணிப்பு அதிகாரியாக சிப்காட் மேலாண் இயக்குனர் கே.செந்தில்ராஜ்; கிருஷ்ணகிரி, ஓசூரில் நடந்த கூட்டத்தில் இணை மேலாண் இயக்குனர் ஆகாஷ் உட்பட, 21 அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, மேலாண் இயக்குனர் கே.செந்தில்ராஜ் கூறியதாவது:
தொழில் பூங்காக்களில் குறைகேட்பு கூட்ட அறிவிப்பை, திருநெல்வேலி, கங்கைகொண்டான் பூங்காவில் சமீபத்தில் தொழில் துறை அமைச்சர் ராஜா அறிவித்தார்.
அதன் அடிப்படையில், இம்மாதத்திற்கான கூட்டம், 21 சிப்காட் தொழில் பூங்காக்களில் நடைபெற்றது. அதில் தொழில் மனைகளை வாங்கியுள்ள தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, பூங்கா அருகில் வசிக்கும் மக்களும் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது, 14 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் பெறப்படும் புகார், அவற்றின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாதந்தோறும் தொழில் துறை செயலருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் புகார் மீது, 14 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவிப்பு

