ADDED : ஏப் 13, 2025 07:30 PM

சுயதொழில் செய்பவர்கள் மத்தியில் டெர்ம் காப்பீடு பெறுவது கணிசமாக அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணையம் வழியே காப்பீடு சேவை வழங்கும் பாலிசிபஜார் நிறுவனம் நடத்திய ஆய்வில், சுயதொழில் செய்பவர்கள் டெர்ம் காப்பீடு பெறுவது 58 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்களில் 88 சதவீதம் பேர் இளம் தலைமுறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டெர்ம் காப்பீடு பெறும் எண்கள் எண்ணிக்கையும், கடந்த ஐந்தாண்டுகளில் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் நிதி சுதந்திரம், இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைகிறது.
பெரும்பாலான சுயதொழில் செய்பவர்கள், 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான காப்பீட்டை நாடுகின்றனர். டில்லி, பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களும் இந்த பிரிவில் வளர்ந்து வருகின்றன.
காப்பீடு திட்டங்களில், காப்பீடு பாதுகாப்பு மற்றும் அளிக்கும் திட்டமாக டெர்ம் காப்பீடு அமைகிறது. விழிப்புணர்வு அதிகரிப்பு மற்றும் பிரத்யேக பாலிசிகள் அறிமுகம் ஆகியவை, இந்த பிரிவில் வளர்ச்சிக்கு காரணங்களாக அமைந்துள்ளன.

