வேளாண் இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கோரும் வணிகர் சங்க பேரமைப்பு
வேளாண் இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு கோரும் வணிகர் சங்க பேரமைப்பு
ADDED : பிப் 19, 2025 11:26 PM

சென்னை:'வேளாண் இடுபொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றிற்கான ஜி.எஸ்.டி., வரியை முழுமையாக நீக்க வேண்டும்' என தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்திஉள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம்:
வணிகர்களின் வாழ்வாதார உறுதிக்கும், பாதுகாப்புக்கும் தமிழக அரசு முன்னுரிமை அளித்து, சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்
வணிக உரிமங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் ஒற்றை சாளர முறையில், ஆயுள் உரிமமாக வழங்க வேண்டும்
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, மாதாந்திர மின் கட்டணத்தை வணிக நிறுவனங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்
வேளாண் இடுபொருட்கள், விதைகள், வேளாண் இயந்திரங்கள், உரம், பூச்சி மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி.,யை முழுமையாக நீக்க வேண்டும்
சாலைகளிலும், பொது இடங்களிலும் சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் மற்றும் பழைய உலோக கழிவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க வேண்டும்
விற்பனை ரசீதுகளில் ஏற்படும் சிறு தவறுகளுக்கு ஜி.எஸ்.டி., அபராதம் விதிக்கும்போது, அதிகாரிகள் அரசு உத்தரவை பின்பற்ற வேண்டும்
வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு ஜி.எஸ்.டி., தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, வணிக பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கவேண்டும்
நான்கு அடுக்குகளை கொண்ட ஜி.எஸ்.டி.,யை 8 மற்றும் 10 சதவீதம் என இரண்டு வகையாக மாற்றி அமைக்க, மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டும்
வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள் 24 மணிநேரம் இயங்க அரசாணை மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் இருப்பினும், காவல்துறை அத்துமீறல் காரணமாக வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

