UPDATED : டிச 13, 2025 01:06 AM
ADDED : டிச 13, 2025 01:04 AM

மும்பை : கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் அதிக பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
'இந்திய மாநிலங்களின் புள்ளியியல் தரவுகள்' கையேட்டின் 10வது அத்தியாயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி குறியீடுகள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், வங்கிகளிடம் இருந்து அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜா அறிக்கை
'தமிழகத்தின்
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 31.19 லட்சம் கோடி ரூபாயாக
அதிகரித்துள்ளது; இது, கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு அமைத்த அடித்தளத்தின்
விளைவு' என, அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அறிக்கை:
இந்திய மாநிலங்கள் பற்றிய, 2024 - 25 புள்ளிவிபர அறிக்கையை ரிசர்வ் வங்கி
வெளியிட்டுள்ளது. இதில், தமிழக மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்பு,
31.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, 2023 - 24ல்,
26.89 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டில், 16 சதவீதம் வளர்ச்சி
கண்டுள்ளது. இந்தியாவில் தொழில் துறையினருக்கு உகந்த மாநிலமாக தமிழகம்
உள்ளது.
இந்த வளர்ச்சி, தமிழகம் இதுவரை செயல்படுத்திய
நலத்திட்டங்களுக்கு சான்றாக நடக்கிறது. இந்த வளர்ச்சி, முதலீட்டாளர்கள்
நம்பிக்கை, வலுவான நிர்வாகம், மாநிலம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான
திறமையான பணியாளர்களின்கடின உழைப்பை பிரதிபலிக்கிறது.
தனிநபர்
வருமானத்தில் தமிழகம் தொடர்ந்து, முன்னணி பெரிய மாநிலங்களில் ஒன்றாக
திகழ்கிறது. இந்த தொடர்ச்சியான வளர்ச்சி ஒரு பகுதியில் மட்டும் அல்லாமல்,
மாநிலம் முழுதும் காணப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

