குஜராத் வர்த்தக சபை அழைப்பு திருப்பூர் பிரதிநிதிகள் பயணம்
குஜராத் வர்த்தக சபை அழைப்பு திருப்பூர் பிரதிநிதிகள் பயணம்
ADDED : ஜூலை 12, 2025 10:13 PM

திருப்பூர்:சர்வதேச தரச்சான்று பெறுவது உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களில் வழிகாட்டுமாறு, குஜராத் தொழில் துறையினரின் அழைப்பை ஏற்று, திருப்பூர் பிரதிநிதிகள் அங்கு சென்றுஉள்ளனர்.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 60 சதவீதம் அளவுக்கு பின்னலாடைகள் பங்கு வகிக்கின்றன. ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தியில், 60 சதவீத பங்களிப்புடன், திருப்பூர் முன்னோடி நகரமாக விளங்குகிறது.
குறிப்பாக, ஏற்றுமதி வர்த்தகத்தால், நாட்டுக்கு அன்னிய செலாவணி ஈட்டுவதிலும் முக்கிய இடத்தில் இருக்கிறது.
ஐரோப்பியா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்ட, சர்வதேச தரச்சான்றுடன், புத்தாக்க வர்த்தகம் செய்யப்படுகிறது.
குஜராத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, உள்நாட்டு ஜவுளி வர்த்தக வினியோகம் நடக்கிறது; ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு, நுாலிழை ஏற்றுமதி நடக்கிறது.
இருப்பினும், சர்வதேச அளவில் காட்சிப்படுத்தும் அளவுக்கு, முறையான தரச்சான்று கட்டமைப்பு இல்லை; ஆய்வக வசதியும் இல்லை.
ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தங்களுக்கு தரச்சான்று, ஆய்வக வசதி ஏற்படுத்துவது குறித்து வழிகாட்ட வேண்டுமென, குஜராத் தெற்கு வர்த்தக சபையினர் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசகர் பெரியசாமி கூறுகையில், ''மத்திய அரசு திட்டங்களில், ஆய்வகம், சர்வதேச தரச்சான்று பெறுவதற்கான வழிகாட்டுதல் வழங்க வேண்டுமென, குஜராத் தெற்கு வர்த்தக சபை அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அங்கு பிரதிநிதிகள் சென்றுள்ளனர்” என்றார்.