வெள்ளி நகைக்கும் ஹால்மார்க் அமலானது ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து தரம் அறியலாம்
வெள்ளி நகைக்கும் ஹால்மார்க் அமலானது ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து தரம் அறியலாம்
ADDED : செப் 04, 2025 11:26 PM

புதுடில்லி:வெள்ளி நகைகளை டிஜிட்டல் முறையில் அடையாளம் காணும் வகையில், வணிகர்கள் தன்னார்வ முறையில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.,1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தர நிர்ணய ஆணையமான பி.ஐ.எஸ்., வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தங்க நகைகளுக்கான ஹால்மார்க் முத்திரை போன்று, வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் தனித்துவ அடையாள குறியீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வெள்ளி நகை மற்றும் கலைப்பொருளுக்கும் ஒரு தனித்துவமான ஆறு இலக்க ஹால்மார்க் அடையாள எண் வழங்கப்படும்.
இந்த எண்ணை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து, நகையின் தரம் குறித்த விபரங்களை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளலாம். இதில் நகையின் வகை, துாய்மை மற்றும் ஹால்மார்க் தேதி, பரிசோதனை மையம், நகை வியாபாரியின் பதிவு எண் ஆகியவற்றை அறியலாம்.
ஏற்கனவே, 2014ம் ஆண்டிலேயே, தர முத்திரையை விருப்ப அடிப்படையில் பெறுவது அறிமுகமான நிலையில், அதில் 800, 835, 925, 970, 900, ஆகிய ஐந்து தரநிலைகள் இருந்தன. புதிதாக 958, 999 ஆகியவை தற்போது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. ஹால்மார்க் முத்திரையில், சில்வர் என்ற பெயர், தரநிலை மற்றும் ஹால்மார்க் தனி அடையாள எண் ஆகிய மூன்று பகுதிகள் இடம்பெற்றிருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 87 மாவட்டங்களில் தற்போது 230 ஹால்மார்க் முத்திரை மையங்கள் இயங்கி வருகின்றன
கடந்த 2024 - -25ம் நிதியாண்டில், 32 லட்சம் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை இடப்பட்டுள்ளது