தென்னை நார் கட்டி ஏற்றுமதிக்கு அரசு சான்றிதழ் மத்திய அரசு நடவடிக்கையால் மகிழ்ச்சி
தென்னை நார் கட்டி ஏற்றுமதிக்கு அரசு சான்றிதழ் மத்திய அரசு நடவடிக்கையால் மகிழ்ச்சி
ADDED : அக் 12, 2025 03:37 AM

பொள்ளாச்சி:சீனாவுக்கு 'காயர் பித் பிளாக், அதாவது தென்னை நார் துகள் கட்டிகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான 'பிளான்ட் குவாரன்டைன்' சான்றிதழ் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், தடைபட்ட ஏற்றுமதி மீண்டும் துவங்க உள்ளது.
இந்தியாவில், 14 மாநிலங்களில், 23,000 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. தென்னை நார் உற்பத்தியில், உலக தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்து, 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, 12 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார், 20 லட்சம் மெட்ரிக் டன் 'காயர் பித் பிளாக்' ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதில், தென்னை நார் 90 சதவீதமும், 'காயர் பித் பிளாக்' 50 சதவீதமும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சீன அரசு, காயர் பித் பிளாக்குக்கு தரச்சான்றிதழ், தர நிர்ணயம் முக்கியம் என, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அறிவித்தது.
இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதனால், தென்னை நார் உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காயர் பித் பிளாக்குக்கு தரச்சான்று உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. இதனால், கடந்த மூன்று மாதங்களாக ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருந்தது.
மத்திய அரசின் கீழ் இயங்கும் கயிறு வாரியம், விவசாயத்துறை அமைச்சகம், இரு மாதங்களாக அதற்குண்டான ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆனாலும், அனுமதி கிடைக்காததால், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சான்றிதழுக்காக விண்ணப்பித்து காத்திருந்தனர்.
இது குறித்து, சிறு, குறு, நடுத்தர அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபஸ்ரீ சோபா கரல்ராஜ், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலையிடமும் தேசிய தென்னை நார் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வாயிலாக மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு 'பிளாண்ட் குவாரன்டைன்' சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த, ஏழு நாட்களுக்குள், 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சான்றிதழ் பெற்று ஏற்றுமதிக்கு தயாராகி வருகின்றன. கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.