ஹெலிகாப்டர் கேபின் அசெம்பிளி ஏர்பஸ் -- மஹிந்திரா ஒப்பந்தம்
ஹெலிகாப்டர் கேபின் அசெம்பிளி ஏர்பஸ் -- மஹிந்திரா ஒப்பந்தம்
ADDED : ஏப் 11, 2025 12:12 AM

புதுடில்லி:பிரான்ஸ் விமான உற்பத்தி நிறுவனமான 'ஏர்பஸ்' குழுமத்தின் ஹெலிகாப்டர் பிரிவு, மஹிந்திரா குழுமத்தின் 'மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஏர்பஸ்சின் 'ஹெச் 130' என்ற ஹெலிகாப்டருக்கு தேவையான 'ப்யூசலேஜ்' என்ற கேபின் கட்டுமானத்தை, மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி மற்றும் அசெம்பிளி செய்ய வேண்டும்.
தற்போது, இதன் உற்பத்தி துவங்க இருப்பதாகவும், ஹெலிகாப்டரின் முதல் கேபின் அசெம்பிளி, மார்ச் 2027ல் வினியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, இந்த 'ஹெச் 130' ஹெலிகாப்டர், பயணியர் போக்குவரத்து, தனியார் மற்றும் வணிக பயன்பாடு, மருத்துவம் மற்றும் கண்காணிப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும். இந்த ஹெலிகாப்டரில் ஏழு பேர் வரை பயணம் செய்ய முடியும்.
மஹிந்திரா நிறுவனம், ஏர்பஸ் விமான உபகரணங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த ஒப்பந்தம், இந்நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேலும் பலப்படுத்தும்.
ஏர்பஸ் நிறுவனம் ஆண்டுக்கு 12,139 கோடி ரூபாய்க்கு உபகரணங்கள், சேவைகளை இந்தியாவில் இருந்து பெறுகிறது.
உற்பத்தி செய்யும் ஒவ்வொரு விமானத்திலும், இந்திய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளன.

