'ஸ்டார்ட்அப்' தயாரிப்புகளை பொதுத்துறைக்கு விற்க உதவி
'ஸ்டார்ட்அப்' தயாரிப்புகளை பொதுத்துறைக்கு விற்க உதவி
ADDED : ஜூன் 03, 2025 10:45 PM

சென்னை:தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தயாரிப்புகளை பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு உதவ, மத்திய அரசின், 'ஜெம் போர்டலில்' ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைக்க வலியுறுத்தப்படுகிறது. அதற்காக, சென்னை, கோவை, மதுரையில் சிறப்பு முகாமை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் நடத்துகிறது.
தமிழகத்தில், 10,000க்கும் மேற்பட்ட, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசின் கீழ் செயல்படும் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகின்றன. இதேபோல் கேன்டீன், தபால், துாய்மை பணி உள்ளிட்ட சேவை பணிகளையும் பெறுகின்றன.
இந்நிறுவனங்கள், 'ஜெம் போர்டல்' வாயிலாக இணையதள, 'டெண்டர்' கோரி ஒப்பந்த நிறுவனங்களிடம் பொருட்களை வாங்குகின்றன.
புதிதாக தொழிலில் களமிறங்கியுள்ளதால், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஜெம் போர்டல் பதிவு விபரம் தெரிவதில்லை. எனவே, அந்நிறுவனங்களை ஜெம் போர்டலில் இணைக்கும் முகாமை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நடத்த உள்ளது.
இதில், ஜெம் போர்டலில் பதிவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிவிக்கப்படும்.