'ஹீரோ பார் ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சி: புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நிதியுதவி
'ஹீரோ பார் ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சி: புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நிதியுதவி
ADDED : நவ 28, 2024 02:05 AM

சென்னை:வாகனத் துறையில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளை, 'ஹீரோ மோட்டோகார்ப் ' நிறுவனம், தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்துடன் இணைந்து ஊக்குவிக்க உள்ளது.
இந்தியாவில் மோட்டார் வாகன தொழில் துறையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஹீரோ நிறுவனம், வாகன துறையை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க உள்ளது.
இதற்காக அந்நிறுவனம், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனத்துடன் இணைந்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஸ்டார்ட் அப் டி.என்., அலுவலகத்தில், 'ஹீரோ பார் ஸ்டார்ட் அப்' நிகழ்ச்சியை டிச., 3ம் தேதி நடத்துகிறது.
இதில் பங்கேற்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் டி.என்., தளத்தில் பதிவு செய்ய வேண்டும். சிறப்பான கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், முதலீடு உள்ளிட்ட உதவிகள் செய்யப்பட உள்ளன.