நேபாளத்திலிருந்து அதிக இறக்குமதி: சமையல் எண்ணெய் வணிகர்கள் கவலை
நேபாளத்திலிருந்து அதிக இறக்குமதி: சமையல் எண்ணெய் வணிகர்கள் கவலை
ADDED : ஏப் 13, 2025 09:46 PM

புதுடில்லி:எஸ்.ஏ.எப்.டி.ஏ., எனப்படும், 'தெற்காசிய தடையற்ற வர்த்தக பகுதி' ஒப்பந்தத்தின் கீழ், நேபாளம் மற்றும் பிற சார்க் நாடுகளில் இருந்து, சமையல் எண்ணெயை வரியின்றி இறக்குமதி செய்வது குறித்து, இந்திய சமையல் எண்ணெய் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் வரியில்லா சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மற்றும் பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதாகவும், இறக்குமதியால், உள்நாட்டு எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் எண்ணெய் வித்து விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் அரசுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதால் இதுகுறித்து, உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என, தொழிற்துறையினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த மார்ச் 18ம் தேதியன்று சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் தெரிவித்திருப்பதாவது:
இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சலுகை வரியின் கீழ், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, மூலச்சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
சுங்கத்துறையின் இந்த அறிவிப்பு, அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்துவதுடன், ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் விதி மீறல்களை தடுக்கவும் பயன்படும் என கூறப்படுகிறது.

