UPDATED : ஜன 19, 2024 04:59 PM
ADDED : ஜன 16, 2024 11:45 PM
மும்பை:பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்குகள், நேற்று முதன்முறையாக பட்டியலிடப்பட்ட விலையான 867.20 ரூபாயை தாண்டியது.
நேற்று வர்த்தக நேரத்தின் இடையே, நிறுவனத்தின் பங்குகள் 895 ரூபாயை எட்டியதால், பட்டியலிடப்பட்ட விலையை கடந்தது மட்டுமல்லாமல்; பாலிசிதாரர்களுக்கு வழங்கப்பட்ட விலையையும் கடந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 43 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இதுதவிர, நாட்டின் அதிக சந்தை மதிப்பை கொண்ட பொதுத்துறை நிறுவனம் என்ற நிலையை எட்டும் துாரத்தில் எல்.ஐ.சி., உள்ளது. தற்போது 5.72 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் எஸ்.பி.ஐ., முதலிடத்தில் உள்ளது.இதற்கு அடுத்ததாக 5.64 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் எல்.ஐ.சி., இரண்டாம் இடத்தில் உள்ளது.எல்.ஐ.சி.,யின் 3.50 சதவீத பங்குகள் மட்டுமே சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். நேற்று வர்த்தக முடிவில் இந்நிறுவன பங்கின் விலை 4.42 சதவீதம் உயர்ந்து, 892.50 ரூபாயாக நிலைபெற்றது.

