மோட்டார் பம்பு உற்பத்திக்கு கோவையில் உயர்திறன் மையம்
மோட்டார் பம்பு உற்பத்திக்கு கோவையில் உயர்திறன் மையம்
ADDED : ஆக 13, 2025 02:09 AM

சென்னை; தமிழகத்தில் தொழிற்சாலைகள் மற்றும் அனல், நீரேற்று மின் நிலையங்களில் பயன்படுத்தும் உயர் தொழில்நுட்ப மோட்டார் பம்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட, கோவையில் உயர்திறன் மையம் அமைக்கப்பட உள்ளது.
மோட்டார் பம்பு உற்பத்தியில், கோவை மாவட்டம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. இங்கு ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றுள்ள, 200 நிறுவனங்கள் மோட்டார் பம்புகளை உற்பத்தி செய்கின்றன.
அவை, வீடுகள், விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கும் வகையில், 0.25 குதிரை திறன் முதல், 25 குதிரை திறன் கொண்டதாக உள்ளன.
உள்நாட்டு சந்தையில் இவை விற்கப்படுவதுடன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் என, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதிஆகின்றன.
கோவையில், அளவின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் மோட்டார் பம்புகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவற்றின் மதிப்பு குறைவாக உள்ளது. இதற்கு, வீடு, விவசாயத்திற்கு பயன்படும் மோட்டார்களை அதிகளவில் உற்பத்தி செய்வதே காரணம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் மஹாராஷ்டிரா புனேவில், தொழிற்சாலைகள், அனல் மற்றும் நீரேற்று மின் நிலையங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும், உயர்தொழில்நுட்ப மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மதிப்பு அதிகம்.
உயர்தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தேவை. கோவையில் மோட்டார் பம்பு உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதில் ஐந்துக்கும் குறைவான நிறுவனங்களே, பெரிய தொழில் நிறுவனங்களாக உள்ளன. மற்றவை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்.
அவற்றால் ஆராய்ச்சிக்கு அதிக செலவிட முடியாத நிலை உள்ளது. எனவே, கோவையில் உயர் தொழில்நுட்ப மோட்டார் பம்பு உற்பத்தியை ஊக்குவிக்க, உயர்திறன் மையம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு, இந்த நிதியாண்டின் பட்ஜெட்டில் வெளியானது. 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் இதை அமைக்க உள்ளது.
இதற்காக, கோவையில் உள்ள, 'சிட்டார்க்' எனப்படும், 'சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் டெஸ்டிங் அண்டு ரிசர்ச் சென்டர்' மையத்தின் வளாகத்தில், 10,000 சதுர அடியில் இடம் அடையாளம் காணப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கோவையில் ஆண்டுக்கு சராசரியாக, 10 லட்சம் மோட்டார் பம்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன
பெரும்பாலும் வீடு, விவசாயத்துக்கு தேவையான, குறைவான திறன் கொண்டவையே தயாரிக்கப்படுகின்றன
உயர்தொழில்நுட்ப மோட்டார்கள் பம்பு உற்பத்தி நிறுவனங்கள் மிகக் குறைவாகவே உள்ளன