ADDED : ஜூன் 03, 2025 11:57 PM

கோவை:அலுமினியம் மற்றும் உருக்கு இறக்குமதிக்கான வரியை, அமெரிக்கா இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும் என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பான பியோ கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, 'பியோ' வெளியிட்டுள்ள அறிக்கை:
உருக்கு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை, 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
அதிக பங்களிப்பு
இது, துருப்பிடிக்காத ஆட்டோ உதிரிபாகங்கள், பொறியியல் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கூடுதல் வரியானது, அமெரிக்க சந்தையில் நம் விலையின் போட்டித் தன்மையைப் பாதிக்கக்கூடும்.
கடந்த நிதியாண்டில், இந்தியா 6.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள உருக்கு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில், 0.86 பில்லியன் டாலர், அலுமினியம் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகளாகும்.
அமெரிக்க சந்தையில், உயர்ந்த தரம் மற்றும் குறைந்த விலையால், தன் சந்தை பங்களிப்பை இந்தியா அதிகரித்து வரும் நிலையில், இது பாதிப்பை ஏற்படுத்தும். 25 சதவீத கூடுதல் வரி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மத்திய அரசு இதில் தலையிட வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா நிராகரிப்பு
இதற்கிடையே, அலுமினியம், ஸ்டீல் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வரியை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பில் இந்தியா செய்த முறையீட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது.